| 8 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
நமது பழைய நாகரிகம், உயர்ந்ததாயினும்சரி, தாழ்ந்ததாயினும்சரி அதனை அப்படியே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது பழைய வரலாறு நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்காது. முன்னேற்றம் என்பது தடுக்க முடியாதது; காலப்போக்கை ஒட்டியது; நமது பழைய நாகரிகத்தை நாம் அறிந்துகொள்வதனால் நமது முன்னேற்றம் இன்னும் விரைந்து வளரும். ஆதலால் இந்நூலிலே பத்துப்பாட்டுக் காலத்துச் செய்திகள் பல அப்படியே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களின் பண்பாட்டை அறிய இந்நூல் உதவுவது உறுதி. இந்த நம்பிக்கையுடனேயே இந்நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் இந்நூலை வரவேற்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடுதான் இந்நூல் வெளி வருகின்றது. இதில் உள்ள குற்றங் குறைகளை அறிஞர்கள் எடுத்துக்காட்டுவார்களானால் அவை நன்றி அறிவோடு திருத்திக்கொள்ளப்பெறும். சவுராஷ்டிராநகர் சென்னை-24 | சாமி. சிதம்பரன் |
|