பக்கம் எண் :

70பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

வாள்வாய் எருந்தின், வயிற்றகத்தடக்கித்,
தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலியாடும்         (55-61)

இவ்வடிகள் மேலே சொல்லிய செய்தியை விளக்குவன.

மதுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது "செந்தமிழ் மொழி நிலைத்து நின்று வளர்வது; மிகுந்த பழம் பெருமை வாய்ந்தது; மகிழ்ச்சி மிகுந்திருக்கின்ற மக்கள் வாழும் தெருக்களையுடையது; இத்தகைய சிறப்புடையது மதுரையம்பதி" என்று பாடியுள்ளார். இதனை

தமிழ் நிலை பெற்ற, தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரை                      (66-67)

என்பதனால் காணலாம்.

தமிழ்ச் சங்கம் நிலைபெற்று நின்று தமிழ் வளர்த்தது மதுரையம்பதி என்ற கருத்தும் இவ்வடிகளிலே காணக்கிடக்கின்றது. மதுரையின் பெருமைக்குத் தமிழ் நிலை பெற்றிருப்பதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சோழ நாட்டின் செழிப்பு

அடுத்தபடியாகச் சோழ நாட்டின் சிறப்பைக் கூறும் போது "அது நீர் வளங் குன்றாத நாடு" என்று குறிப்பிடுகின்றார். "சோழ நாட்டில் வயல்களிலே தாமரைகள் பூத்திருக்கின்றன; அத்தாமரைகளிலே வண்டுகள் தங்கள் பெடைகளைத் தழுவிக்கொண்டு சீகாமரம் என்னும் பண்ணைப் பாடிக் கொண்டிருக்கின்றன" என்று கூறுகின்றார்.

"அழகிய முகம்போல் மலர்ந்திருக்கின்றன தெய்வத் தாமரைகள். உள்ளங்கையிலே சாதிலிங்கம் படிந்தாற் போல்