பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 71

சிவந்த இதழ்கள் அமைந்த செம்பொன் ஆசனமாக அத்தாமரைகள் விளங்குகின்றன. அந்த ஆசனங்களிலே அழகிய தும்பிகள் தாங்கள் விரும்பும், அழகிய பெடை வண்டுகளைத் தழுவிச் சிறகுகளை அடித்துக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணைப் பாடிக்கொண்டிருக்கும். இத்தகைய குளிர்ந்த-குறையாத செல்வமுடைய-கிழக்குத் திசையில் உள்ள சோழனாடு" என்று சோழநாட்டைக் குறிப்பிடுகிறார். இதனை

திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசில் அங்கை அரக்குத்தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை,
ஏம இன்துணை தழீஇ இறகுளர்ந்து
காமர் தும்பி காமரம் செப்பும்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலம்;                                (73-79)

என்ற அடிகளிலே காணலாம்.

இந்நூல் தோன்றிய காலத்திலே உறையூர் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது. உறையூரைப்பற்றி இவர் குறிப்பிடும்போது, "ஓடாப்பூட்கை உறந்தை" (83) என்று தீட்டியிருக்கிறார். "பகைவர்களுக்குத் தோற்று ஓடாத வலிமை வாய்ந்த உறையூர்" என்பது இதன் பொருள். இதனால் சோழர் தலைநகரின் சிறப்பையும் சோழமன்னரின் வீரத்தையும் காணலாம்.

நல்லியக் கோடனுடைய நாட்டிலே எண்ணற்ற செல்வங்கள் இருந்தன; வளமிகுந்த சேர, பாண்டிய, சோழ நாட்டைக் காட்டிலும் வற்றாத செல்வங்கள் குவிந்திருத்தன. ஒய்மானாடே உயர்ந்த செல்வமுடைய நாடு என்பதைக் குறிக்கவே முடியுடை வேந்தர்கள் மூவர் நாட்டையும் புகழ்ந்து பாடினார் இவ்வாசிரியர்.