பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 75

வறியோர்களுக்கு அவர்கள் இல்வாழ்வை இனிது நடத்துவதற்கான எல்லாச் செல்வங்களையும் கொடுப்பான்; இவன் போர் முனையிலே வெற்றி பெறும் ஆற்றலுள்ளவன்; நீண்ட கைகளையுடையவன்; இடைவிடாத மழைத்துளி-எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கும் காற்று-உயர்ந்த சிகரங்கள்-இவைகள் அமைந்த குளிர்ந்த மலை நாட்டின் தலைவன், நள்ளியென்னும் பெயர் பெற்றவன்.

கரவாது
நட்டோர் உவப்ப, நடைப்பரிகாரம்
முட்டாதுகொடுத்த, முனை விளங்கு தடக்கைத்,
துளிமழை பொழியும், வளிதுஞ்சு நெடுங்கோட்டு,
நளிமலை நாடன், நள்ளியும்;                 (103--107)

வள்ளல் ஓரி

நெருங்கிய கிளைகள்-பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்கள்-இளமையும் முதிர்ச்சியும் உடையவை-இத்தகைய சுரபுன்னை மரங்களும் சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாடு; இந் நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாகக் கொடுத்தவன்; காரியென்னும் குதிரையையுடைய மலையமான் திருமுடிக்காரியுடன் போர் செய்தவன்; ஓரியென்னும் குதிரையை உடையவன்; ஓரி என்னும் பெயரைக் கொண்டவன்.

நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்,
குறும் பொறை நன்னாடு, கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த,
ஓரிக்குதிரை ஓரியும்;                   (107--111)

இவை கடையெழு வள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பு. இவ்வள்ளல்கள் எழுவரும் சமமானவர்கள்; ஏற்றத் தாழ்வில்லாதவர்கள்;