சுற்றமுடன் உட்கார்ந்து அதனை உண்டாள். " இவ்வாறு ஓர் ஏழைக் குடும்பத்தின் நிலைமையை எடுத்துக் கூறியிருக்கிறார். ஒல்கு பசியுழந்த ஒடுங்கு நுண்மருங்குல் வளைக்கைக் கிணைமகள், வள்ளுகிர்க்குறைத்த குப்பை வேளை உப்பிலிவெந்ததை, மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து, இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்; (135--139) இந்த அடிகள் அந்தக் குடும்பத்தின் நிலையைக் காட்டுகின்றன. ஒரு குடும்பப் பெண்ணின் உயர்ந்த பண்பையும் இவ்வடிகள் காட்டுகின்றன. உணவு வகை அக்காலத்தில் பெரும்பாலான தமிழ்மக்கள் எத்தகைய உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்தனர் என்பதை இந்நூலிலே காணலாம். நெய்தல் நிலத்திலே வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள். "காய்ந்த குழல்மீனைச் சுட்ட உணவை ஒவ்வோரிடத்திலும் பெறுவீர்கள். வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்" (163) "வறல் குழல்" என்பது குழல்மீன் கருவாடு. காய்ந்த மீனுக்குக் கருவாடு என்று பெயர். வேடர்குலப் பெண்கள் புளிக்கறி செய்வார்கள்; சோறும் சமைப்பார்கள்; வேட்டையாடிக் கொண்டுவந்த ஆமான் முதலியவற்றையும் சமைப்பார்கள்; இவற்றையே விருந்தினர்க்கும் இட்டு உபசரிப்பார்கள். |