பக்கம் எண் :

80பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

வரலாற்றுக் குறிப்பைக் கொண்டும், "ஆலமர் செல்வன்" என்ற தொடரைக் கொண்டும் இவ்வுண்மையைக் காணலாம். தமிழ்நாட்டிலே நான்மறை பயின்ற அந்தணர்கள் வாழ்ந்தார்கள்; அவர்கள் நிலப்பிரபுக்களின் ஆதரவிலே வாழ்ந்துவந்தனர். அரசர்களுடைய ஆதரவிலும் வாழ்ந்தனர். "அருமறை நாவின் அந்தணர்" என்ற தொடரால் இதைக் காணலாம். "அந்தணர், அருகா அரும்கடி வியனகர் (187) என்ற தொடரும் இதை விளக்கும்.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் இந்நூலாசிரியர் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தன; இன்னும் பல வகுப்புப் பிரிவுகளும் இருந்தன.

இமயமலையைச் சிவபெருமான் வாழும் கைலாயமலை என்று தமிழர்கள் நம்பியிருந்தனர். "கடவுண்மால்வரை" என்று இமயமலையைக் குறித்திருப்பதன் மூலம் இதை அறியலாம்.

தமிழ்நாட்டிலே பல சிறந்த தொழில்களும், கலைகளும் வளர்ந்திருந்தன. இவைபோன்ற இன்னும் பல உண்மைகள் இந்நூலிலே உண்டு.