பக்கம் எண் :

  

5. பெரும் பாணாற்றுப்படை

இது பத்துப்பாட்டுள் நான்காவது பாட்டு. 500 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது. சிறுபாண் ஆற்றுப்படையைக் காட்டிலும் இது பெரியது. பாணரை ஆற்றுப்படுத்தியது என்பது பொருள். பெரும்பாணரை- அதாவது பெரிய யாழ்வாசிக்கும் பாணரை ஆற்றுப்படுத்தியது என்று கூறினும் பொருந்தும்

ஆசிரியர்

இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர். கண்ணனார் என்பது இவருடைய இயற்கைப் பெயர். இவர் தந்தையின் பெயர் உருத்திரன் அல்லது உருத்திரனார். இவர் கடியலூரில் பிறந்தவராகவோ அல்லது வாழ்ந்தவராகவோ இருக்கவேண்டும். ஆதலால் இவருடைய தந்தைப் பெயரையும் ஊர்ப்பெயரையும் சேர்த்து இவரைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்று அழைத்தனர்.

பத்துப்பாட்டுள் இரண்டு பாட்டுக்கள் இவரால் பாடப்பட்டவை. இந்நூல் ஒன்று; ஒன்பதாம் பாட்டாகிய பட்டினப்பாலை ஒன்று.

இவர் பொதுமக்களுடன் நன்றாகக் கலந்து பழகியவர்; அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் தேர்ந்து தெளிந்தவர்.