மற்றொரு பாணனைப் பார்த்தான்; அவனுடைய ஏழ்மை நிலைக்கு இரங்கினான். உடனே அவனிடம், அணுகி அவனுடைய வறுமையொழிந்து வாழ்வு பெற வழி கூறினான். "இரவலனே! நான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெற்று வறுமை தீர்ந்தேன். நீயும் காஞ்சியிலே வாழும் அந்தக் காவலனிடம் போ. வழியிலே உனக்கு எந்த ஆபத்தும் உண்டாகாது. அச்சமின்றி வழிநடந்து போகலாம். போகும் இடமெல்லாம் உனக்குத் தாராளமாக உணவு கிடைக்கும். தொண்டை நாட்டில் உள்ள எயினர்களும், ஆயர்களும், உழவர்களும், வலைஞர்களும், பார்ப்பார்களும், நெய்தல் நிலத்து மக்களும் உன்னை வரவேற்று விருந்தளிப்பார்கள். வழிநடை வருத்தம் தோன்றாமல் காஞ்சி நகரத்தை அடையலாம். இளந்திரையனைக் கண்டு அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடுக. பாடினால் உனது வறுமை நீங்கச் செல்வங்களை வாரி வாரி வழங்குவான்; புத்தாடைகள் தருவான்; இன்சுவை உணவளிப்பான்; உன் பெண்டிர்களுக்குப் பொன்னாபரணங்களைப் பூணக் கொடுப்பான்; தேர்களையும், குதிரைகளையும் பரிசளிப்பான்." இவ்வாறு பரிசு பெற்று வந்த பாணன், பரிசு தேடிச் செல்லும் பாணனுக்குச் சொல்லி அவனுக்கு வழிகாட்டி அனுப்பி வைத்தான். இதுவே இந்நூலின் அமைப்பு. இந்த முறையிலே இது பாடப்பட்டுள்ளது எயிற்றியர் உணவு வெண்மையான பற்களையுடைய வேடர்குலப் பெண்கள், எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற மென்மையான புல்லரிசியைத் தேடிச் சேர்ப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற |