பக்கம் எண் :

86பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

ஆயர் உணவு

முல்லை நில மக்களாகிய இடையர்கள் ஆடுமாடுகளாகிய செல்வம் படைத்தவர்கள். ஆயினும் அவர்களுடைய உணவும் புன்செய்த் தானியங்கள் தாம். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும், பாலும் அவர்கள் உட்கொள்ளும் உணவாகும். இவ்வுணவையே விருந்தினர்க்கும் இடுவார்கள். இதனை

மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல், பாலொடும் பெறுகுவிர்       (166--168)

என்பதனால் அறியலாம்

செல்வர் உணவு

மற்ற நிலத்து மக்களைக் காட்டிலும் நீர்வளம் நிலவளம் பொருந்திய மருத நிலத்து மக்கள் செல்வமுள்ளவர்கள். வறுமையறியாதவர்கள், பசியால் வாடாதவர்கள். மருதநிலப் பகுதியிலே பெரிய பெரிய ஊர்களும் உண்டு. இக்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களைவிட நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உயர்தரமான வாழ்க்கை நடத்துகின்றனர். இதுபோலவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இருந்தது.

"பசியையும் வறுமையையும் அறியாத-பெருங்குடி மக்கள் வாழ்கின்ற-செல்வம் நிறைந்த-பெரிய ஊரிலே தங்கினால் சிறந்த உணவைப் பெறுவீர்கள். ஊக்கமுடன் உழைக்கும், உழைப்பாளர்களால் ஈட்டப்பட்ட வெண்மையான நெற்சோறு கிடைக்கும். அதனுடன் வீட்டிலே வளர்ந்த பெட்டைக்கோழியின் பொரியலும் கிடைக்கும். " இதனை