நடுத்தரமான வாழ்க்கை நடத்தும் செல்வர்களின் இல்லம் இவ்வாறு இருந்தது. பார்ப்பார் இல்லத்தைப் பற்றியும் இந்நூலாசிரியர் குறித்திருக்கின்றார்.  "பந்தல்களிலே பசுங்கன்றுகள் கட்டப்பட்டிருக்கும். நல்ல வீடுகள், அவைகள் பசுஞ்சாணியால் மெழுகப்பட்டுக் கோயில்களைப் போலக் காட்சியளிக்கும். வீட்டிலே வாழும் கோழிகளும் நாய்களும் அங்கேயில்லை. கிளிகளைப் போலே வேதங்களை உரத்துப் படித்துக் கொண்டிருப்பார்கள். வேதத்தைக் காக்கும் அந்தணர்கள் வாழும் இடம் இவ்வாறு காணப்படும்.  செழுங்கன்று யாத்த சிறுதாட்பந்தர்ப் பைஞ் சேறு மெழுகிய படிவநன்னகர், மனையுறைகோழியொடு ஞமலி துன்னாது, வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்றும், மறைகாப்பாளர் உறைபதி;               (297--301) இவ்வாறு பார்ப்பார் வாழுமிடத்தைப்பற்றிக் கூறியுள்ளார். இவர்களும் நடுத்தர மக்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தனர்.  குடிசைகள் சிறிய ஊர். அதிலே பல சின்னஞ்சிறு குடிசைகள். அந்தக் குடிசைகளின் கூரைகள் வைக்கோலால் வேயப்பட்டவை. அந்த வைக்கோல் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து கருமை நிறமாகிவிட்டது. இதனால் எந்தக் குடிசையைப் பார்த்தாலும் கருமை நிறமாகவே காட்சிதருகின்றது. இக்காட்சி மழைக் காலத்திலே வானத்திலே உலாவும் கருமேகங்களைப் போலக் காணப்படுகின்றது.   |