பக்கம் எண் :

பெரும்பாணாற்றுப்படை95

இவர்கள் செய்கைக்குத் தடையில்லாதிருக்கும் பொருட்டு அந்த நகரத்தின் கோட்டைவாயில் என்றும் அடைக்கப்படுவதேயில்லை.

அந்த நகரம் திருமாலின் கொப்பூழிலே தோன்றி நான்முகனைப் பெற்றெடுத்த தாமரை மலரைப்போலப் பழமையானது; அழகு பொருந்தியது.

செங்கற்களால் சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர் எழுப்பப்பட்டிருக்கும் பெரிய நகரம் அது. ஈக்கள் பலாப்பழத்தின் இனிமைக்காக அதைச் சூழ்ந்து மொய்ப்பதுபோல, மக்கள் பலரும் அந்நகரத்தின் சிறப்பைக்காண அங்கே குழுமியிருப்பர்.

இவ்வுலகில் உள்ள பலரும் வணங்கும்படியான பெருமையுள்ள நகரம். அந்நகரத்திலே பல திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அது மிகவும் பழமையான புகழ்பெற்ற நகரம். இந்த நகரத்திலே திரையன் அரசு வீற்றிருக்கின்றான். அவன் நூற்றுவரை வென்ற பாண்டவர்களைப் போலப் பகைவர்களையெல்லாம், வென்றான். தன்னை அண்டினவர்களை எல்லாம் ஆதரிக்கின்ற வள்ளலாக வாழ்கின்றான்."

இவ்வாறு காஞ்சி நகரத்தின் பெருமையைக் கூறுகின்றது இந்நூல். இதனை 393 முதல் 420 வரையில் உள்ள அடிகளிலே காணலாம்

இளந்திரையன் பெருமை

இப்பாட்டின் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையனுடைய சிறப்பையும், அவனுடைய அரசாட்சியின் மேன்மையையும் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் அழகாகப் பாடியிருக்கின்றார்.