செல்வத்தைக் கொள்ளை கொள்வதையே உழவுத்தொழில் போலக் கொண்டிருக்கும் கொடியவர்கள் அவனுடைய நாட்டில் இல்லை. இடியும் இடித்து வீழ்ந்து கொடுமை செய்யாது. நச்சுப்பாம்பும் பிறரைக் கடிக்காது. காட்டுவிலங்கும் துன்பம் செய்யாது. இவ்வாறு அவனது அரசின் மேன்மையைப் பற்றிக் கூறியுள்ளார். நல்லாட்சி நிலவும் நாட்டின் இயல்பை இதனால் அறியலாம். இன்னும் பல அக்காலத்தில் உப்புப்பொதிகள் ஏற்றிய வண்டியை உமணப்பெண்களே ஓட்டிக்கொண்டு போவார்கள். வாணிகர்கள் தம்மைத்தாம் காத்துக்கொள்ளும் வீரர்களாயிருந்தனர். அவர்கள் முத்து, மாணிக்கம், முதலியவற்றை விற்பனை செய்யப்போகும்போது, வாள் முதலிய படைக்கலங்களையும் பாதுகாப்புக்காக எடுத்துக்கொண்டு போவார்கள். மிளகு மூட்டைகளைக் கழுதைகளின்மேல் ஏற்றிச் சென்று விற்பனை செய்வார்கள். இடையர்குலப் பெண்கள் நெய்யைக் கொண்டுபோய் விற்பனை செய்வார்கள். அந்த நெய்யின் விலைக்குப் பதிலாகப் பால்தரும் எருமையை வாங்கிக் கொண்டு வருவார்கள். கப்பல்கள் திசைமாறாமல் கரையைக் கண்டுபிடிப்பதற்காகக் கலன்கரை விளக்கங்கள் இருந்தன. தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் மேல்நாட்டுக் குதிரைகளும் வடநாட்டுப் பண்டங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. மேல்நாட்டுக் குதிரைகள் என்பன கிரேக்க தேசத்துக் குதிரைகள். |