“நான் நாட்டுக்குச் சேவை செய்யப் போகிறேன். என்னால் முடிந்ததைச் செய்யப் போகிறேன். இன்றைய பேச்சு என்னை மாற்றிவிட்டது.” விஜய் சொன்னான். சேரன் ஏதும் பேசவில்லை. விஜய் விடவில்லை. “என்ன சேரா ! உன் மனத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா?” சேரன் விஜயின் முகத்தை நேராகப் பார்த்துப் பேசினான். “விஜய் ! என் மனத்தில் நினைப்பதை அப்படியே சொல்கிறேன். அதைத் தப்பாக நினைக்காதே. நீ பெரிய பணக்காரரின் மகன். நீ நினைத்தால் நாட்டுக்கும் சேவை செய்யலாம் ; உலகத்துக்கும் சேவை செய்யலாம். என்னால் அது முடியுமா? என் வீட்டுக்கே நான் போதுமான சேவை செய்யாமல் சுற்றுவதாக அம்மா திட்டுகிறாள். நான் நாட்டுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?” “நாட்டுச் சேவைக்குப் பணம் தேவையில்லை...” விஜய் முடிக்கும் முன் சேரன் குறுக்கிட்டான் : “பலம்கூடப் போதும். என்னைப் பார்? நான் பலசாலியுமல்ல. சுமாரான உடம்பு. சின்னக்காய்ச்சல் வந்தால்கூட மூன்று நாள் படுத்து விடுவேன்.” “உடல் பலம்கூட வேண்டாம். மனபலம் போதும் !” “விஜய், உன்னிடம் உண்மையைச் சொல்வதில் வெட்கப்படவில்லை. எனக்கு மனபலமும் இல்லை. இருட்டில் தனியே போகப் பயப்படுவேன். வீட்டில் யாரும் இல்லாமல், தனியே பகலில் இருக்கவும் பயந்தான். தெரு |