பக்கம் எண் :

 11

வில் யாராவது சண்டை போட்டால், என் மனம் நடுங்கும் ! நான்எங்கே ! தன் உயிர் போனாலும் ஒரு டாங்கு உடைய வேண்டும் என்று வெடிகுண்டோடு வீதியில் படுத்துத் தியாகம் செய்த வீரர்கள் எங்கே ! என்னால் நாட்டுக்கு எதுவும் செய்யமுடியாது ! நீ நாட்டுக்குச் சேவை செய் ! நான் உன் சேவையைப் புகழ்கிறேன்.”

“நீ ஒரு கோழை.”

விஜய் வெறுப்போடு சொன்னான். சேரன் மறுக்கவில்லை. என்றாலும் அவன் மனம் புண்பட்டது.

“நேரமாகுது. நான் கிளம்பறேன்” என்று சேரன் புறப்பட்டு விட்டான்.

விஜய் அதன் பின்பும் நாட்டுக்குச் சேவை செய்த சிறுவர்களைப் பற்றியே நினைத்தான். அன்றிரவு அவன் இன்னது என்று தெரியாத இடத்திலே துப்பாக்கி ஏந்திப் பகைவர்களைச் சுட்டு வீழ்த்துவதாகக் கனவு கண்டான்.

நான்கைந்து நாட்கள் விஜய், நாட்டுச் சேவையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். பேச்சு மெல்லக் குறைந்தது. ஒரு வாரத்துக்குப் பின்பு அவன் சென்னை அறிஞரை-கென்னடியின் பொன் மொழியை - நேதாஜியின் பாலர் படையை முற்றிலும் மறந்து விட்டான். ‘நீ ஒரு கோழை! நீ பாயும் புலியல்ல ; பதுங்கும் பூனை! உனக்குப் போய் வீரமன்னன் சேரன் பெயரை வைத்தார்களே!’ என்றெல்லாம் சேரன்மீது விஜய் தொடுத்த குற்றச்சாட்டுக்களும் குறைந்து, மறைந்தன.

இது பிரசங்க வைராக்கியம் போலும் ! பேரறிஞர்கள் நாவன்மையோடு பேசுவதைக் கேட்டு, அந்தக் கணத்தில், அந்த இடத்தில் அவர்கள் கூறியபடி நடக்க எத்தனையோ பேர் தீர்மானிப்பார்கள். கூட்டம் கலையும்போது