பக்கம் எண் :

104 

இங்கே கொண்டு வர வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்தார்.

இரவு எட்டு மணி.

கமிஷனர் அறைக்குள் ‘லொள், லொள்’ என்று குரைத்துக் கொண்டே பாய்ந்த டாலரைச் சேரன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான் ! டாலரும் அவன் உடம்பை நாக்கினால் ஈரப்படுத்தியது ! ஈரம் என்பதற்கு அன்பு என்று ஒரு பொருள் இருப்பதைத் தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடம் !

நாயும், சேரனும் ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்னும் பிரிய நிலையில் இருந்தனர்.

ஹனிமேன் தான் முதலில் பேசினான்.

“சேரா ! விடிந்தால் நவம்பர் பதினாலு ! அதனால் மைக்ரோ பிலிமை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுப்பது நல்லது !”

சேரன் தன்னிலைக்குத் திரும்பினான். “இதோ ஒரு நொடியில் பிலிமைத் தருகிறேன்” என்றபடி டாலரின் எதிரே மண்டியிட்டு உட்கார்ந்தான். அறைக்குள் இருந்த கமிஷனர், துணைக்கமிஷனர், ஹனிமேன் ஆகிய மூவருடைய ஆறு கண்களும் நாயிடமே பதிந்திருந்தன.

சேரன் நெஞ்சம் ஒரு கணம், ‘நாம் வைத்த இடத்தில் மைக்ரோ பிலிம் இல்லாமல் போனால் என்ன செய்வது?’ என்று நினைத்தது. மறுகணம், அவன் காதுகளே அவனுடைய இதயத்துடிப்பைத் தெளிவாகக் கேட்டன.

சேரனின் வலக்கை டாலரின் கழுத்தில் படிந்தது. மற்றொரு கை, தரையைத் தொடுவது போல நீண்டு தொங்கும் டாலரின் இடக்காதை மேலே உயர்த்தியது.