சேரனின் வலக்கை காதுகளின் கீழிடத்தை மெல்லத் தடவியது. அங்கே ஒரு ஸ்டிக்கர் இருந்தது. சேரன் அந்த ஸ்டிக்கரை மெல்ல இழுத்தான். டாலர் சிணுங்குவது போலக் குரல் எழுப்ப, சேரன் பட்டென்று ஸ்டிக்கரை இழுத்தான். ஸ்டிக்கர் கைக்கு வந்து விட்டது. அந்த ஸ்டிக்கரிலேயே, தேனீ அவனிடம் கொடுத்த எக்ளேர் சாக்லேட் அளவிலான சீல் செய்யப்பட்ட மைக்ரோ பிலிம் இருந்தது ! தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேளை தான் பிடிப்பட்டாலும், இந்த பிலிம் அவர்களிடம் சிக்கக் கூடாது. இதற்கு என்ன வழி என்று யோசித்தபோது டாலர் நினைவு வந்தது. டாலரைக் கொண்டு வந்து, அதன் இடக்காதின் கீழே ஒரு சதுர அங்குலப் பரப்பு முடியை பிளேடால் மழித்து, அங்கே பிலிமை வைத்து ஸ்டிக்கரில் ஒட்டி, முடியை அதன்மேல் படரச் செய்து, காதைத் தொங்க விட்டான், சேரன். டாலரின் இடக்காதைப் பிடித்துப் பார்த்தாலும், ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது தெரியாது. சேரனின் தந்திரம் பயன் அளித்துவிட்டது. பிலிம் அவனிடம் இருந்திருந்தால், அது பல மணி நேரத்துக்கு முன்னரே ஜாக்கியிடம் சிக்கியிருக்கும் அல்லவா? மைக்ரோ பிலிமை வாங்கக் கமிஷனர் கையை நீட்டினார். “சாரி சார் ! இதை ஓ. பி. யூ. வின் தமிழ்நாட்டுத் தலைவரிடம் தர வேண்டும் என்பது தேனீ எனக்கு இட்ட கட்டளை” என்று கூறிய சேரன், அதை ஹனிமேனிடம் கொடுத்தான். “தேனீ! உங்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டேன்” என்று கூறிக் கொண்டே |