பக்கம் எண் :

 107

துணைக் கமிஷனர் மீது கமிஷனர் சீறி விழுவார் என்று எதிர்பார்த்தான் ஹனிமேன் ! கமிஷனர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, “சேரா ! இங்கே வா !” என்றார். சேரன் அருகில் வந்தான். அவனை ஒரு கையால் அணைத்துக் கொண்டு பேசினார், கமிஷனர்.

“அன்புள்ள காவல் அதிகாரியே ! இவனைப் பார் ! இந்தச் சிறுவனுக்கு முதல் கடமை படிப்பது ! இரண்டாம் கடமை படிப்பது ! மூன்றாவது கடமையும் படிப்பதுதான் ! இப்படி லெனின் சொன்னார். ஆனால் நாட்டைக் காப்பாற்றுவதற்காக இந்த இளங்கன்று- இந்தக் குட்டிமான் கடந்த நாற்பதெட்டு மணி நேரமாக சரியாக உண்ணாமல், உறங்காமல் முந்நூறு மைல் தூரம் கடந்து வந்து, நம் கையில் நமக்குத் தேவையான துரோகிகளின் பட்டியலை - சமூக விரோதிகளின் பட்டியலை ஒப்படைத்திருக்கிறான் ! இதற்காக இவனுக்குச் சம்பளம் இல்லை ! பஞ்சப்படி இல்லை ! பயணப்படி இல்லை. என்றாலும் நமது வேலையை இவன் செய்திருக்கிறான். இவனது பொறுப்புணர்ச்சியும் தியாக மனப்பான்மையும் சம்பளம் வாங்கும் நமக்கு வேண்டாமா?”

துணைக் கமிஷனர் அணுவாகக் குறுகிப் போனார் ! “சாரி சார் ! நீங்க சொன்னபடியே செய்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

“மிஸ்டர் ஹனிமேன் ! சேரனை அழைத்துப் போங்கள். காலையில் வாருங்கள். பட்டியலில் இருக்கிற அத்தனை பேரையும் கைது செய்துவிட்டால், நாளை கொலை நடக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இல்லையென்றால் தொல்லைதான் !” என்று கூறிய கமிஷனர், இருவரையும் அனுப்பினார்.

சேரன் அன்றிரவு உறங்கும் முன், “முருகா ! அனைவரும் கைதாக வழி செய்” என்று வேண்டிக் கொண்டு படுத்தான்.