காவல் துறை கண்ணுறங்காமல் பணி செய்தது ! மைக்ரோ பிலிம் கொடுத்த பெயர்ப் பட்டியலையும் முகவரிகளையும் கொண்டு அந்த இரவே சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தது ! அனைவரையுமா? இல்லை ! ஒருவனைத் தவிர மற்ற அனைவரையும் காவல்துறை கைது செய்துவிட்டது ! ஒருவன் கிடைக்கவில்லை ! அதனால், கமிஷனர் கவலையில் ஆழ்ந்தார். **** சேரன் கண் விழித்து எழுந்தபோது, “குட்மார்னிங் சேரன்” என்னும் குரல் கேட்டது. அதே அறையில் உட்கார்ந்து அன்றைய ஆங்கிலச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த ஹனிமேன்தான் அவ்வாறு சொன்னான் என்பதை அறிந்து கொண்டே சேரன், “குட்மார்னிங் சார்” என்றபடி எழுந்து உட்கார்ந்தான். அறைக்குள் பரவிய வெளிச்சத்தைக் கொண்டு, பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்று புரிந்து கொண்டான். அதனால் தோன்றிய நாணத்தோடு, “ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு” என்றபடி அறையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினான். ஒரு சுவரில் தொங்கிய கடிகாரம் மணி எட்டு இருபது என்று காட்டியது. “மணி எட்டரை ஆகப் போகுதே !” என்றபடி அவசர அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்தான் சேரன். |