பக்கம் எண் :

110 

மாபெரும் திருநாளாக மாறிவிட்ட ஒரு நாள். நவம்பர் 14. அன்று குழந்தைகள் ஆடிப்பாடுவார்கள் ! ஆனந்தமாக இருப்பார்கள் ! சுவையான தின்பண்டமும் கிடைக்கும். அதனால் நவம்பர் 14, என்பதைக் கேட்டால் அழுத பிள்ளை சிரிக்க வேண்டும்! சோம்பிக் கிடப்பவரும் துள்ளிக் குதிக்க வேண்டும் ! அந்தக் குதூகல நாளைக் கொலைக்காகத் தேர்ந்தெடுத்த கொடியவர்கள், இரக்கமற்ற அரக்கர்கள் ! பாசமற்ற பாதகர்கள் ! இதோ, நவம்பர் 14 என்பதைப் பார்த்து மலர வேண்டிய சேரனின் முகம் குவிந்து விட்டதே... !

ஹனிமேன் தன் சிந்தனையை நிறுத்தினான். “சேரா! கவலைப்படாதே ! உன்னுடைய தேசபக்தி இன்றைய நாளைக் குழந்தைகள் நாளாகவே வைத்திருக்கும். கொலை நாள் ஆக்காது! காப்பியைக் குடி !” என்று கூறினான்.

சேரனின் நா காப்பியைச் சுவைத்தாலும் மனம் மட்டும் தேனீ கூறியதையே நினைத்தது!

“வரும் நவம்பர் பதினாலாம் தேதி சென்னையில் ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.”

“முருகா ! கொலை நடக்காமல் தடைசெய் ! தேனீயின் உயிர்த் தியாகம் பயனுடையதாக இருக்கட்டும் ! குழந்தைகள் நாள். குழந்தைகள் நாளாகவே திகழட்டும் !”

சேரன் மனத்துக்குள்ளேயே வேண்டிக் கொண்டான்.

****

சரியாகப் பத்து மணிக்கு ஹனிமேனும் சேரனும் டாலருடன் கமிஷனர் அறைக்குள்ளே நுழைந்தனர். கமிஷனர் இருவரையும் வரவேற்றார். ஹனிமேனும் சேரனும் கமிஷனர் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.