டாலர் அடக்க ஒடுக்கமாக, சேரனுக்கு அருகே உட்கார்ந்தது. கமிஷனரின் ஆணையின்படி ‘கூல்டிரிங்க்ஸ்’ வந்தன. இருவரும் குடித்தனர். இதற்குச் சுமார் பத்து நிமிடம் ஆகியிருக்கும். அந்தப் பத்து நிமிடமும் கமிஷனரிடம் ஹனிமேனோ, சேரனோ எதுவும் பேச முடியாமல், அவர் தொடர்ந்து நான்கைந்து முறை தொலைபேசியில் பேசினார். மூன்று முறை, அலுவலர்கள் டெலக்ஸ் செய்திகளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அப்போது துணைக் கமிஷனர் உள்ளே வந்தார். அவரிடம் தொலைபேசியைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, கமிஷனர் சேரனையும் ஹனிமேனையும் பார்த்தார். “சேரா ! இந்தியக் குடியரசுக்கு எதிராக வெளிநாட்டார் செய்யும் சூழ்ச்சியில் ஈடுபட்ட மாபெரும் துரோகிகளின் கூட்டத்தைச் சுற்றி வளைக்கத் துணை செய்தது, துணை செய்து வருகிறது, நீ உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு வந்து கொடுத்த மைக்ரோ ஃபிலிம். அதிலிருந்த வெளி மாநிலப் பட்டியலை நேற்றிரவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவல் துறைக்கு அனுப்பி விட்டோம். அப்பட்டியலில் குறிப்பிட்ட நபர்களைக் கைதுசெய்த செய்திகள் விடியற்காலையிலிருந்து தொலைபேசி மூலமும் டெலக்ஸ் மூலமும் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் இப்போது சிக்காமல் தப்பினாலும், மிக விரைவில்அவர்களைக் கைது செய்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.” கமிஷனர் சொன்னார். “அப்படியானால் ராத்திரி முழுவதும் நீங்கள் தூங்கலையா சார்?” |