பக்கம் எண் :

112 

கமிஷனர் சிரித்தார்.

“நான், ஒரு மணி நேரமாவது தூங்கியிருப்பேன். துணைக் கமிஷனர்தான் ஒரு நிமிஷம்கூடத் தூங்கவில்லை.”

கமிஷனரின் குரலில் பெருமிதம் தொனித்தது. துணைக் கமிஷனர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, கமிஷனர் பக்கம் திரும்பவே இல்லை.

“இங்கு இன்னும் ஒருவனைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே ! கைது செய்து விட்டீர்களா?”

ஹனிமேன் கேட்டான்.

“இல்லை.”

இதைச் சொல்லும்போது கமிஷனரின் குரலில் கவலை தெரிந்தது.

“ஏன் கைது செய்யவில்லை? நீங்கள் கைது செய்யப் போவது தெரிந்து, அவன் தலைமறைவாகி விட்டானா?”

- இது சேரனின் கேள்வி.

“அப்படியும் இல்லை. இந்த ஆசாமியின் பெயர் ஆர். சேகர். இவன் மேற்கு அண்ணா நகரில் ஒரு வீட்டில் இருக்கிறான். அந்த வீடு பூட்டியிருக்கிறது. அங்கே விசாரித்ததில் அவன் ஆறு நாளுக்கு முன்பு வெளியூருக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனானாம். திரும்பவில்லை. இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தோம். நமக்குத் தேவையான எந்தத் தடயமோ, தகவலோ கிடைக்கவில்லை. அவன் வந்தால் கைது செய்வதற்காக ஆளை நிறுத்தியிருக்கிறோம்.”

இதைச் சொல்லும் போதும் கமிஷனரின் குரலில் அதே கவலை தொனித்தது.