“துரோகக் கும்பலில் ஒருவனைத் தவிர, மற்றவரைக் கைது செய்துவிட்டீர்கள். கிடைக்காத ஒருவனும், தனது வீட்டுக்கு வந்தவுடன் கைதாவான். அதனால் தேனீ குறிப்பிட்ட கொலை நடக்காது, இல்லீங்களா?” சேரன் கேட்டான். கமிஷனர் உடனே பதில் சொல்லவில்லை. இப்போது துணைக் கமிஷனர் தொலைபேசியில் பேசி முடித்திருந்தார். அவர் பதில் சொன்னார். “சேரா ! இன்று நடை பெறவிருக்கும் கொலைத் திட்டம் வெளிநாட்டின் தூண்டுதலினால் போடப்பட்டது. அதனால் இதில் ஈடுபட்டவர்கள் சர்வதேச அரங்கத்தில் அரசியல் கொலைகளை நிகழ்த்தும் திறமையானவர்களிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அத்தகைய பயிற்சி பெற்ற ஒருவன், தான் செய்ய நினைப்பது முற்றிலும் வெற்றிகரமாக நடைபெறத் தகுந்த முன்னேற்பாட்டைச் செய்து கொள்வான். கொலைத் திட்டம் வெளிப்பட்டாலும், கொலையாளி சிக்காமல் திட்டபடி கொலையைச் செய்தே தீரவேண்டும். அதனால் அவன் சில நாட்களுக்கு முன்னரே இருக்கும் வீட்டை விட்டு, இருக்கும் ஊரை விட்டு வெளியூருக்குப் போய் விடுவான். கொலை நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக வந்து விடுவான். இப்போது சேகர் என்பவன்தான் கொலை செய்யப் போகிறவன் என்றும், இவன் கொலை நடக்க வேண்டிய நேரத்தில சரியாய் வந்து சேர்ந்துவிடுவான் என்றும் நாங்கள் யூகிப்பதால், கவலைப்படுகிறோம்.” “யார் அந்த சேகர் ! மிஸ்டர் கமிஷனர் ! அவன் இந்த நகரத்தில் எங்கே ஒளிந்திருந்தாலும் கண்டுபிடித்துக் கைது செய்யுங்கள் !” என்று கூறினான், ஹனிமேன். இப்போதும் துணைக் கமிஷனரே பேசினார். |