பக்கம் எண் :

114 

“சேகர் பற்றி எதையும் சொல்லக் கைது செய்யப் பட்டவர்கள் மறுக்கிறார்கள். சேகர் வீட்டின் அருகே இருப்பவர்களிடம் கேட்டால், சேகர், சிலசமயம் தாடி வைத்திருப்பானாம். சில சமயம் மொட்டை அடித்திருப்பானாம். சில சமயம் மீசையோடும், சில சமயம் மீசை இல்லாமலும் இருப்பானாம். சுமார் ஐந்தரை அடி உயரம், மாநிறம். சுமாரான உடல்வாகு-இவ்வளவுதான் தெரியும். இதைக் கொண்டே, சந்தேகத்துக்கு இடமான அனைவரையும் விசாரணைக்காகக் கைது செய்து அழைத்து வரச் சொல்லி யிருக்கிறோம். என்றாலும் கவலைப்படுகிறோம்.”

துணைக் கமிஷனர் மட்டுமா? ஹனிமேன் கவலை அடைந்தான். சேரன் கவலை அடைந்தான்.

தேனீயின் உயிர்த் தியாகம், சேரனின் வீரப் பயணம்-எல்லாம் வீண்தானா?

அங்கே சில நொடிகள் நிலவிய அமைதியைக் கமிஷனரின் குரல் கலைத்தது.

“சேரா ! தேனீ உயிர் விடும் முன் உன்னிடம் ஏதோ சொல்ல முயன்றதாகக் கூறினாய். அதை மீண்டும் சொல் !”

சேரன் கண்களை மூடிக் கொண்டான். அவன் காதுகளில் தேனீயின் கடைசிக் குரல் கேட்டது.

சேரன் அதை அப்படியே சொன்னான்.

“இதுதான் புதிராக இருக்கிறது ! கொலையாகப் போகிறவர் யார் என்னும் கேள்விக்கு விடை, கு... கு... ம... ம... ! இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டால், கொலையாகப் போகிறவர் யார் என்பது தெரியும். உடனே அவருக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கலாம்’ என்றார் கமிஷனர்.