பக்கம் எண் :

 115

“கு... கு... ” என்பது குடியரசுத் தலைவரைக் குறிக்கலாமோ?” என்று கேட்டான், சேரன்.

“நாங்களும் அப்படி நினைத்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் இன்று சென்னையில் இல்லை. தமிழ் நாட்டில் இல்லை. அவர் டெல்லியில் இருக்கிறார்.”

“குடியரசுத் தலைவர் இல்லை என்றால், மந்திரியாக இருக்குமோ... ? ம... ம... என்று தேனீ சொல்லியிருப்பது மந்திரியைத்தான் குறிக்க வேண்டும்” என்றான், ஹனிமேன்.

“அதையும் நாங்கள் நினைத்துப் பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள். இன்று காலை முதல் இரவு வரை நகரத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் மூன்று மத்திய மந்திரிகளும் ஐந்து மாநில மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் தேனீ குறிப்பிட்டது, யாரை?”- இது துணைக் கமிஷனரின் கேள்வி.

“ம... ம... ம... ம... ” என்று முணுமுணுத்த கமிஷனர் திடீரென்று முகம் பிரகாசம் அடைய, ‘ம... ம... என்பது மத்திய மந்திரியைக் குறிப்பதாகத் தான் இருக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டாலும் இன்று மூன்று மத்திய மந்திரிகள் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களில் யார்?” என்று கேட்டார்.

“ம... ம... என்பது மத்திய மந்திரியானால், கு... கு... என்பது என்ன?” என்று கேட்டான், ஹனிமேன்.

“கு என்பது குழந்தைகள் நாளைக் குறிப்பதாகலாம். மீண்டும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. மத்திய மந்திரிகள் மூன்று பேரும், மூன்று அமைப்புகளின் குழந்தைகள் நாளில் கலந்துகொள்கின்றனர். அதனால் எந்த மத்திய மந்திரியைத் தேனீ குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை !”