களையும் உடன் அழைத்துக்கொள் ! விதியோடு இறுதிப் போரை நடத்திவிடுவோம்” என்றார், கமிஷனர். அதை நிறைவேற்ற ஓடினர், துணைக் கமிஷனர். சேரனும், ஹனிமேனும் கமிஷனருடன் வரவிரும்பினர். கமிஷனர் அனுமதித்தார். அடுத்த ஆறாம் நிமிடம் போலீஸ்வேன் மத்திய நூலகக் கட்டடத்தை நோக்கிப் பறந்தது. வேனுக்குள்ளேயே கமிஷனர், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டே வந்தார். அதை சேரனும் ஆவலோடும் அச்சத்தோடும் கேட்டான். அவன் மடியில் இருந்த டாலரும் கேட்டது. ***** மத்திய நூலகக் கட்டடத்தின் மாடியில் இருந்தது அந்த அரங்கம். அதன் கிழக்கு முனையில் மேடை. மேற்கு முனையில் உள்ளே நுழையும் வழி. வழியிலே சிறிய மேசை அதன்மீது, சந்தனக் கிண்ணம், பன்னீர்சொம்பு, ரோஜாப் பூக்கள் நிறைந்த தட்டு. அதற்கடுத்த மேசையில் வண்ண வண்ணமாகக் கண்ணைக் கவரும் பல சிறுவர் நூல்கள். அவை, அன்று மத்திய அமைச்சர் வெளியிடப் போகும் புத்தம் புதிய நூல்கள். ஹனிமேனுடன் உள்ளே சென்று கொண்டிருந்த சேரனுக்கு, இரண்டாம் மேசையின் முன் நின்று அன்று வெளியாகும் புதிய நூல்களை நிதானமாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்கு இப்போது நேரம் ஏது? ஹனிமேனைத் தொடர்ந்து அவசரமாகச் சென்றான். இருவருக்கும் பின்னால் கமிஷனர் வந்தார். மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கமிஷனரின் வருகை வியப்பை விளைவிக்கவில்லை. அவரது வேண்டுகோளின்படி, முதல் வரிசையில் உட்கார்ந் |