சங்கம் இதுதான்’ என்றபோது, சபையினர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ‘நேருவின் பிறந்த நாளில் குழந்தை நூல்களை வெளியிட்டு அதை இலக்கிய விழாவாக்கியது எங்கள் சங்கமே ! இதுவரை ஏறத்தாழ அறுநூறு நூல்கள் இத்தகைய விழாவில் வெளியாகியுள்ளன’ என்றபோதும் கைதட்டல்தான் ! மேடையில் இப்படிப் பேச்சு நடக்கும்போதே, சி. ஐ. டி. க்கள் மேடையிலும், மேடையின் அருகிலும் இருந்தவர்களை மெதுவாக நெருங்கினார்கள். தமது அடையாள அட்டையைக் காட்டி ஒவ்வொருவராகத் தம்முடன் வருமாறு செய்து, அரங்கத்தின் வெளியே அழைத்துச் சென்றனர். அங்கே விசாரணையும் அவர் ஆயுதம் வைத்திருக்கிறாரா என்ற சோதனையும் ஓசைப்படாமல் நடந்தன. பிறகு சோதிக்கப்பட்டவரை உள்ளே அனுப்பினார்கள். தலைவர் முன்னுரை முடிந்து, ஒரு தமிழறிஞர் குழந்தை இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கமிஷனரின் பார்வை அரங்கை அணு அணுவாக அலசிக் கொண்டிருந்தது. அரங்கின் ஒருபுறம் நின்றிருந்த புகைப்படக்காரர்களைப் பார்த்தார். ஆறு பேர் இருந்தனர். இருவர், தமிழக அரசின் செய்தித் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களை அவர் அறிவார். இருவர் உள்ளூர் பத்திரிகைகளைச் சார்ந்தவர்கள். அவர்கள் முகங்கள் பழக்கமானவையாகவே தெரிந்தன. மீதியுள்ள இருவர் யார்? ஒருவன் இளைஞன். வயது இருபது கூட இருக்காது. ஒடிந்து விழுவது போல மெலிந்த மேனி. நல்ல உயரம். அவர் தேடும் சேகர் சுமாரான உடல்வாகு உடையவன். ஐந்தரை அடி உயரம் உடையவன். ஆறாவது ஆள், வயதானவன். ஐம்பது வயதுக்கு மேலே இருக்க வேண்டும். வெள்ளைத்தாடி, வெள்ளை பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி! ஆனால் கையிலே லேட்டஸ்ட் மாடல் ஹாட் ஷாட் போன்ற காமிரா ! மேல் நாட்டு காமிரா போலத் |