பக்கம் எண் :

126 

கமிஷனர் அவனையே உற்றுப் பார்க்கும்போது, அவனும் கமிஷனரைப் பார்த்தான்.

“கமிஷனர் சார் ! கொலைகாரனுக்கு நாலு முழ தூரத்திலேயே நிற்கிறீர்கள். உங்களால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையே ! எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொள்கிறேன்” என்று மனத்தில் சொல்லிக் கொண்டான்.

அவன்... அவன் யார்?

அவன்தான் கமிஷனர் தேடும் சேகர் ! அன்று மத்திய மந்திரியைக் கொலை செய்யப்போகும் கொடியவன்! அவன் மாறுவேடத்தில் வந்திருக்கிறான்.

அவன் தனது சிறிய காமிராவைக் கண்ணில் பொருத்தி மேடையைப் பார்த்தான்.

எழுத்தாளர்-பதிப்பாளர் அறிமுகம் முடிந்தது. ஏ. வி. எம். அறக்கட்டளையின் பரிசளிப்பு முடிந்தது. இப்போது அமைச்சர் பேசவேண்டும்.

மேடையில் வலப்பக்கத்தில் பேச்சாளருக்காகப் போடப்பட்டிருந்த பீடத்தை நோக்கி அமைச்சர் வந்தார். பீடத்தின் பின்னே நின்றார். அமைச்சர் நல்ல உயரம். அதனால் மார்புக்கு மேற்பட்ட பாகம் பீடத்திற்கு மேலே தெரிந்தது.

சேகர் காமிராவின் கோணத்தைச் சரி பார்த்தான். அமைச்சரின் மார்பு தெரிந்தது. இதயம் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதுபோல, சட்டையில் ஒரு பாட்ஜ் இருந்தது. சேகர் அதைக் காமிராவால் குறி பார்த்தான்.

காமிராவால் குறி பார்த்தானா? அப்படியென்றால்... ... ?

ஆமாம் ! காமிரா உண்மையில் ஒரு நவீன-துப்பாக்கி. படம் எடுப்பது போலப் பொத்தானை அமுக்கினால், ஒரு சிறு தோட்டா சத்தம் செய்யாமல் குறி தவறாமல், பறந்து சென்று அமைச்சரைக் கொல்லும்.