“சேகர் பொத்தானை அமுக்கிய அதே நேரத்தில் தான் டாலர் பாய்ந்தது. சேகரைக் காட்டிலும் அமைச்சருக்கு வெகு அருகே டாலர் இருந்ததால், சேகரின் காமிரா துப்பாக்கி கக்கிய தோட்டா பாதி தூரத்தை அடையும் போதே, டாலர் அமைச்சரின் காலில் மோதியது. அமைச்சர் உடனே கீழே பார்த்தார் ! அழகான காக்கர்ஸ் ஸ்பானியல்! அமைச்சர் சட்டென்று குனிந்து டாலரை இரண்டு கையாலும் அள்ளி எடுத்துக்கொண்டு நிமிர்ந்தார். சேகர் செலுத்திய தோட்டா, அமைச்சர் குனிந்த கணத்திலே அவரைத் தாண்டிச் சென்று, அவருக்குப் பின்னே மேடையில் நின்றிருந்த, சங்கத்து நிர்வாகி ஒருவரின் தோளில் பாய்ந்தது. அவர் “அம்மா” என்று அலறியபடி தோளைக் கையால் பிடித்துக்கொண்டார். அந்தக் கையையும் மீறி இரத்தம் வெளியே பாய்ந்தது. இவ்வளவும் சுமார் கால் நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டன. கிழப் புகைப்படக்காரன் காமிராவின் பொத்தானை அழுத்தியதைப் பார்த்த கமிஷனர், அமைச்சர் குனிந்து நிமிர்ந்ததையும், அந்த நேரத்தில் பின்னே ஒருவன் அலறியதையும், அவன் தோளில் இரத்தம் பெருகுவதையும் கவனித்தார். அடுத்த நொடியில் அவர் புகைப்படக்காரன்மீது பாய்ந்து அவன் கையிலிருந்த காமிராவை ஒரு கையால் பறித்த போதே, அனுபவ மிக்க அவரது மற்றொரு கை இடையிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் முகத்துக்கு நேரே நீட்ட, “அசைந்தால் சுட்டுவிடுவேன்” என்று எச்சரித்தார். ‘அம்மா’ என்ற அலறலையும், கமிஷனரின் மின்னல் வேகப் பாய்ச்சலையும் கண்ட துணைக்கமிஷனரும், காவல் துறையினர் சிலரும் அவரருகே ஓடிவந்தனர். மேடையிலும் அரங்கிலும் இருந்த மக்கள் ‘என்னமோ ஏதோ’ என்று பதறி எழ, அரங்கத்தில் ஒருவகையான குழப்பம் நிறைந்தது. |