பக்கம் எண் :

 129

தன்னை நெருங்கிய துணைக் கமிஷனரிடம், “இதோ இவன்தான் கொலைகார சேகர் ! நம் கண்ணில் மண்ணைத் தூவி, காமிராவையே சத்தம் போடாமல் சுடும் நவீன துப்பாக்கியாக்கிக் கொண்டுவந்திருக்கிறான். இந்தத் தாடி மீசை பொய் !” என்று கூறினார் கமிஷனர்.

துணைக் கமிஷனர் சேகரின் தாடியைப் பிடித்து இழுக்க, அது கையோடு வந்து விட்டது.

இதற்குள் மற்றப் போலீஸ்காரர்களும் கமிஷனர் இருக்கும் இடத்தை நெருங்கினர்.

“இவனைக் கைது செய்து பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள் ! நான்கைந்து பேர் தவிர, மற்ற போலீஸ்காரர்களையும் அழைத்துச் செல்லுங்கள். விழா தொடர்ந்து நடைபெறட்டும். நான் அமைச்சரிடம் பேசிவிட்டு வருகிறேன்”-

கமிஷனர் சொல்லிவிட்டு, தான் பறித்த காமிராவைத் துணைக் கமிஷனரிடம் கொடுத்தார். அவர், போலீஸ்காரர்கள் புடைசூழ, தேசத்துரோகி சேகரை அழைத்துச் சென்றார்.

சேகரின் துப்பாக்கியால் அடிபட்ட, சங்க நிர்வாகியைப் போலீ்ஸ் காவலுடன் மருத்துவமனைக்கு உடனே அனுப்பினார், கமிஷனர்.

அமைச்சர் இன்னும் நின்று கொண்டே இருந்தார். அவர் கையில் டாலர் இருந்தது. அவரை எச்சரித்த காவல் அதிகாரியை எள்ளி நகையாடியதை எண்ணி வருந்திக் கொண்டு நின்றார்.

கமிஷனர் அமைச்சரிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“கமிஷனர் ! இந்த நாய் என் உயிரைக் காப்பாற்றியது. இது யாருடைய நாய்?” என்று கேட்டார், அமைச்சர்.