பக்கம் எண் :

130 

கமிஷனர் சேரனை அழைத்து அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார்.

“நாய் இவன் அழைத்து வந்தது. உங்களையும் இந்த நாட்டையும் காக்க இந்தச் சிறுவன்பட்ட சிரமங்கள் பல ! மாண்புமிகு அமைச்சரே, நீங்கள் ஒரு நிமிடம் உட்காருங்கள். நடந்தது என்ன என்பதைக் கூறிக் கூட்டத்தின் குழப்பத்தைப் போக்குகிறேன்.”

- கமிஷனர் சொன்னதும், அமைச்சர் உட்கார்ந்தனர்.

கமிஷனர் ஒலிபெருக்கியின் முன் நின்று பேசினார். சேரனின் முயற்சிகளை விவரித்தார். அவன் கொண்டு வந்த நாய் தற்செயலாய் அமைச்சரைக் காப்பாற்றியதைக் கூறினார். இனி, விழா தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன் பிறகு விழா நடந்தது. ஆனால் அது, சேரனின் பாராட்டு விழாவாக அமைந்தது ! அமைச்சர், “வீரச் சிறுவருக்கான விருது சேரனுக்கு வழங்கப்படும்” என்று அறிவித்தபோது, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

விழா முடிந்தது ! ஆனால் சேரனைப் பாராட்டுவது முடியவில்லை ! பத்திரிகைக்காரர்கள், வானொலி நிலையத்தார், தொலைக்காட்சி நிறுவனத்தார் முதலிய அனைவரும் போட்டிபோட்டுக் கொண்டு சேரனைப் பேட்டி கண்டனர். அவர்களிடமிருந்து சேரனை மீட்டுச் செல்வதே, கமிஷனருக்குப் பெரிய வேலையாயிற்று !

அன்று மாலை செய்தித்தாள்கள் சேரனின் வீர வரலாற்றை வெளியிட்டன ! டாலரின் படமும் சேரனின் படமும் பிரசுரமாயின ! வானொலிகள் சேரனின் தேச பக்தியைக் காவியம் போல் தந்தன ! அன்று மாலை இந்தியாவில் எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும், சேரனைப் பற்றிய சென்னை நிகழ்ச்சியை அஞ்சல் செய்தன.