சென்னையில் அண்ணாநகரில், தமது வீட்டில் உட்கார்ந்திருந்த அறிஞர், சேரன் பள்ளியில் வந்து பேசினாரே, அந்த சென்னை அறிஞர் தொலைக்காட்சியில் சேரன் தன் வரலாற்றைக் கூறுவதைக் கேட்டு மெய் சிலிர்த்தார். ‘பூனையாய் இருந்த என்னைப் புலியாக்கித் தேசத் தொண்டு புரியவைத்தது. அந்த அறிஞர் பேச்சு ! அவர் எடுத்து விளக்கிய கென்னடியின் பொன்மொழி !’ என்று தொலைக்காட்சியில் சேரன் கூறினான். கேட்ட அறிஞர், “என் பேச்சு இப்படி ஒரு வீரச் சிறுவனை உருவாக்குகிறதா? இனிமேல் பணத்துக்காகவும் பாராட்டுக்காகவும் பெரியவர்களின் பெருங் கூட்டத்தில் போய் வெறுங்கூச்சல் போடமாட்டேன்! ஏடு தூக்கிப் பள்ளியில் பயிலும் இளம் சிறுவர்கள் கூட்டத்தில்தான் பேசுவேன் ! அங்கேதான் பல சேரன்கள் தோன்றுவார்கள் ! தேசத்தைக் காப்பார்கள்!” என்று உறுதி பூண்டார். கோவை- விஜய், ஹாலின் சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சியில் தோன்றிய தன்நண்பன் சேரனையும், தனது நாய் டாலரையும் பெருமிதத்தோடு பார்த்துப் பூரித்தான். “பூனையாய் இருந்த நான் புலியாக வேண்டும் என்று சொன்னவன், நண்பன் விஜய். அவன் உதவியால்தான் தேனீயின் வேண்டுகோளை நிறைவேற்ற முடிந்தது. விஜயின் டாலர்தான் அமைச்சரைக் காப்பாற்றியது. அதனால் எனக்குக் கிடைக்கும் பாராட்டில் பாதி விஜய்க்குச் சொந்தம்” என்று சேரன் கூறுகிறான். விஜய் மனம் மகிழ்கிறது ! “சேரா ! உன்னைப் போல ஒரு நண்பனைப் பெற்றது, என் பாக்கியம்” என்று அவன் வாய் முணுமுணுக்கிறது. |