பக்கம் எண் :

 133

“கோவையிலிருந்து புறப்பட்ட நான் வேலூரை அடைந்தேன். வேலூரிலிருந்த சென்னைக்கு வர எனக்கு உதவி செய்தது பாப்பாவும் அவள் அம்மாவும்” என்ற சேரன், பாப்பாவைச் சந்தித்த நிகழ்ச்சியையும், அவள் சேர்த்து வைத்த பணத்தைச் சந்தோஷமாகக் கொடுத்ததையும் விளக்குகிறான்.

“ஐயா ! இந்தப் பாப்பா படிக்க விரும்புகிறாள். ஆனால் வறுமையால் அது முடியவில்லை. பாப்பா படிப்பதற்கு உதவி செய்ய முடியுமா?”

சேரன் கேட்டதும், அமைச்சர் இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து அவனைத் தழுவிக்கொள்கிறார்.

“சேரா ! நீ வீரன் ! நீ தேசபக்தன் ! அத்தோடு எளியவர்க்கு உதவ நினைக்கும் ஏழைப் பங்காளன் ! இதுதான் எங்கள் அண்ணா வழி ! பாப்பாவின் தாயாருக்கு அரசு அலுவலகத்தில்ஒரு வேலை தருகிறோம். அதோடு பாப்பாவை ஒரு பள்ளியில் சேர்க்கிறோம் ! அவள் படிப்புக்கான முழுச்செலவையும் அரசு ஏற்கும் ! அதே போல நீ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, உன்னுடைய படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.”

அமைச்சர் கூறியதைக் கேட்ட பாப்பா, ஆனந்தத்தோடு, “அம்மா !” என்று அன்னையின் பக்கம் திரும்பினாள். பாப்பாவின் அம்மா அவளை அன்போடு அணைத்துக் கொண்டு, “உங்கப்பா செஞ்ச தர்மம் சேரன் உருவிலே வந்து உதவியிருக்கு. பாப்பா, இனிமே நீ படிக்கலாம்! படித்து பெரிய டாக்டராகணும் !” என்று கூறும் போதே, அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன.