பக்கம் எண் :

16 

‘ஏறத்தாழ இரண்டு மணி நேரம் தூங்கியிருக்கிறோம்’ என்று நினைத்தபடி அறையிலிருந்து வெளியே வந்து வரவேற்பு அறையில் உட்கார்ந்தான்.

சமையற்காரன் வந்து, “டிபனும் காப்பியும் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான்.

பகலில் சாப்பிட்டதே இன்னும் ஜீரணமாகவில்லை. அதனால் ‘காப்பி மட்டும் போதும்’ என்றான். காப்பி வந்தது. அதைக் குடித்துக்கொண்டே, சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினான். விஜய்-விஜயின் அப்பா-விஜயின் அம்மா, யாரும் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை.

‘விஜய் நம்மை விட்டுவிட்டு எங்கே போயிருப்பான்?’

சேரன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து கொண்டு டிரைவர் ஒருவன் உள்ளே வந்தான்.

“பெரியய்யா மாலையிலே ஒரு பார்ட்டி கொடுக்கறாரு. அதுக்கு அவங்க முன்னாடியே ஓட்டலுக்குப் போயிட்டாங்க. நீங்க எழுந்த பிறகு, சின்னையா உங்களை ஓட்டலுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னாரு.”

விஜயின் தந்தை அன்று மாலை ஓட்டலில் ஒரு விருந்து தரப் போவதை முன்னரே விஜய் சொல்லியிருந்தான். அது இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

“எனக்கும் விஜய்க்கும் எத்தனை பெரிய ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம். விஜயின் அன்பைப் பெற்றிருப்பதே என் அதிர்ஷ்டம். ஊட்டியிலேயே மிகப் பெரிய ஓட்டலில் பார்ட்டி என்றான். பெரிய பெரிய அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் வருவார்களாம். அங்கே போகாமல் இருப்பதே நல்லது” என்று நினைத்தான் சேரன்.

“இல்லைங்க டிரைவர், நான் வரலைங்க. இங்கேயே இருந்துடறேன்” என்றான்.