“காருக்கு அங்கே வேலை இருக்கும். நான் ஓட்டலுக்குப் போறேங்க.” டிரைவர் போய் விட்டான். சேரன் சிறிது நேரம் அங்கிருந்த தமிழ், ஆங்கில வார இதழ்களைப் புரட்டினான். நேரம் எருமையாக நகர்ந்தது. ‘இரவு மணி ஏழு இருக்கும்’ என்று நினைத்துக் கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஐந்தரைதான்! அதற்கு மேலும் அவனால் அறைக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை. எழுந்தான். “கொஞ்ச நேரம் வெளியே நடந்துட்டுச் சீக்கிரம் திரும்பி வந்துடறேனுங்க.” சொல்லிவிட்டுப் பங்களாவின் வெளியே வந்தான். இரண்டு பக்கமும் பல வண்ணப்பூக்கள் மலர்ந்து மணம் வீச, இடையே இருந்த வழியே நடந்து கேட்டுக்கு வெளியே வந்தான். ஊட்டியின் காற்று எப்போதும் சில்லென்று இருக்கும். உடலுக்கு ஊறுசெய்யாமல், ஆரோக்கியம் தரும். தூய்மையும் குளிர்ச்சியும் பெற்ற அந்தக் காற்று சேரனின் உடலைத் தாக்கியது. மலைக்காற்றின் குளிர்ச்சியை அனுபவித்தவாறு, மலைகளின் அரசியான நீலகிரியின் கோலத்தை ரசித்தவாறு மேலேறிச் செல்லும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தான். |