பக்கம் எண் :

18 

அரை மணிநேரம் நடந்திருப்பான். திடீரென்று எங்கும் இருள் கவிந்து விட்டதை உணர்ந்தான். அவன் சென்ற சாலையில் விளக்குகள் இல்லை.

விஜயின் பங்களா கீழே இருக்கிறது. திரும்பவும் அரை மணி நேரம் நடக்க வேண்டும். சேரன் திரும்பி நடந்தான். இரண்டே நிமிடத்தில் அவன் நடை தடைப்பட்டது.

காரணம்?

அவனுக்கு முன்னே அவன் உயரத்தில் முக்கால் உயரம் கொண்ட இரண்டு நாய்கள் சாலையின் நடுவே நின்றிருந்தன. அவற்றின் வால் ஒட்ட நறுக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், அவை டாபர்மேன் என்னும் காவல் நாய்கள் என்பதைப் புரிந்து கொண்டான். அவற்றைப்போல ஒரு டாபர்மேன் விஜயின் பங்களாவில் உண்டு. பகலிலே கூண்டிலே அடைத்து வைத்திருப்பார்கள். இரவில் திறந்து விடுவார்கள். டாபர்மேனின் ஓட்டமும் திறமையும் விஜய் சொல்லக்கேட்டிருந்தான். அது குரைத்தாலே குலை நடுங்கும். சேரன் டாபர்மேன் இருக்கும் கூண்டுப்பக்கமே போகமாட்டான்.

இப்போது சாலையை மறித்துக் கொண்டு நிற்கும் டாபர்மேன்கள் அவனுக்கு இரண்டு புலிகளாகத் தெரிந்தன.

அவற்றை எப்படிக் கடப்பது?

முன்னும் பின்னும் யாரும் இல்லை. அரசினர் பூங்காவை ஒட்டிய அந்தச் சாலையில்ஆள் நடமாட்டம் அபூர்வம் என்பது அவனுக்குத் தெரியாது.

சில நிமிடம் நின்றான். டாபர்மேன்கள் அங்கேயே விளையாடின.

அவற்றை நெருங்கச் சேரன் பயந்தான்.