பக்கம் எண் :

 19

‘நாய்களுக்கு மோப்ப சக்தி உண்டு. யாராவது பயந்தால் அவர்களைத்தாக்க முற்படும். அதனால் நாயைப் பார்த்தால் பயப்படக் கூடாது’ என்று எங்கோ-எப்போதோ படித்திருந்தான்.

“பயத்தோடு நாயை நெருங்கினால் அது நம்மீது பாயும்” என்று திடமாக நம்பிய சேரன் சில அடிகள் பின் வாங்கினான்.

கீழே நகரத்தில் விளக்குகள் எரியத் தொடங்கின. நட்சத்திரங்கள் நிறைந்தவானம் திடீரென்று மண்ணுக்கு வந்து விட்டதைப் போன்ற அழகான காட்சி. அதை ரசிக்கும் மனநிலைதான் சேரனுக்கு இல்லை.

சேரன் இன்னும் சில அடிகள் பின்னேறினான்.

அங்கே ஒரு ஒற்றையடிப் பாதை சாலையிலிருந்து இறங்கி மலைச் சரிவில் செல்வதைக் கண்டான். சரிவில் இறங்கி நடந்தால் விஜயின் பங்களாவை அடையலாம் என்ற நம்பிக்கையோடு சேரன் சரிவில் இறங்கினான்.

சில அடி சென்றதும் கால் வழுக்கியது. சிறுசிறு கற்கள் உருண்டன. எங்கே காலை வைப்பது என்று தெரியவில்லை. வானத்தில் நட்சத்திரங்களும் தெரியாத மேக மூட்டம்.

சேரன் மெதுவாக நகர்ந்தான். காலைப் பத்திரமாக ஊன்றினான். எச்சரிக்கையோடு எடுத்தான். இத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் அவன் கால் சறுக்கியது.

மறுகணம்...

சேரன் அந்தச் சரிவிலே விழுந்து புரண்டு, உருண்டு பொத்தென்று எதன் மீதோ விழுந்தான்!

மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். ‘நாம் எதன் மீது விழுந்தோம்’ என்று தடவிய சேரன் திடுக்கிட்டான்.