மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல சேரன் அந்த மனிதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டான். முழங்கால் இரண்டும் நிலத்தைத் தொட, காலின் விரல்கள் நிலத்தை உந்த, கைகள் இரண்டையும் முழங்காலின் மேல் வைத்து ஊன்றிய நிலையில் அமர்ந்த சேரன் கீழே விழுந்திருந்தவனை உற்றுப் பார்த்தான். அதற்குள் வானத்தின் இருள் கலையுமாறு நட்சத்திரங்கள் தோன்றின. மேகங்களின் இடையே நிலா தன் முழு வடிவைக் காட்ட முடியாமல் ஒளிந்து ஊர்ந்தது. அதனால் ஓரளவு வெளிச்சம் பரவியது. அந்த வெளிச்சத்தில் கீழே விழுந்து கிடப்பவனைப் பார்க்க முடிந்தது. நாற்பது வயது மதிக்கக் கூடியவன் தரையில் மல்லாந்து விழுந்திருந்தான். வயிற்றுப்பகுதியில்... “ஐயோ... ரத்தம் ! ஐயா, ரத்தம் கசியுதுங்களே ! கீழே விழுந்தப்போ கல்லு முள்ளுகுத்திட்டதுங்களா? இப்போ உங்களைக் காத்துக் கொள்ளத்தான் உதவி வேணும். நீங்கதப்பா என்னைக் காத்துக் கொள்ள உதவி செய்யணும்னு சொல்லிட்டீங்க.” அந்த மனிதனின் முகத்தில் ஒரு குறுநகை படர்ந்தது. சேரன் கூறியதை மறுப்பது போலத் தலையை இடமும் வலமுமாக மெல்ல அசைத்தான். “இல்லை தம்பீ, என்னைக் காத்துக் கொள்ள உதவி கேட்கவில்லை. என்னைக் காத்துக் கொள்ள முடியாது ! வயிற்றிலே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அரை மணி நேரமாச்சு. இப்பவே ஒரு டாக்டர் வந்தாலும் என்னைக் காப்பாத்த முடியாது !” |