நிழல்போலத் தொடர்ந்தான். இரண்டு நாட்களுக்கு முன் ஊட்டிக்கு வந்து சேர்ந்தான். ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு பங்களாவில் சதித்திட்டத்தவர் கூடுகிறார்கள் என்பதை அறிந்த தேனீ அந்தக் கூட்டத்தில் நடப்பதை அறிய முயன்றான். ஒரு ஈ காக்கைகூட பங்களாவுக்குள் நுழைய முடியாதபடி காவல் மிகுதியாய் இருந்தது. தேனீயின் முயற்சிகள் பலிக்கவில்லை. பங்களாவுக்குச் சிறிது தூரத்தில் இருந்த வானுயர வளர்ந்த பலாமரத்தில் ஏறி அமர்ந்து, சக்தி வாய்ந்த பைனாகுலர் மூலம் பங்களாவையே பார்த்தான் தேனீ. சதியாளர்கள்ஓர் அறையில் கூடுவதைப் பார்க்க முடிந்தது. பம்பாயில் தேனீ கண்டுபிடித்த மனிதன் உட்பட எட்டுப் பேர் அறையில் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தலைவன் என்று தோன்றியது. அவனிடம் மற்றவர்கள் பணிவோடு நடப்பது தெரிந்தது. தலைவன் கைகளை ஆட்டி, மேஜையைக் குத்தி, மூக்கின் முனைக்கு வந்த கண்ணாடியைப் பின்னுக்குத் தள்ளி, பேசினான்... பேசினான்... வெகு நேரம் பேசினான். அனைத்தையும் பழங்காலத்து ஊமைப் படம்போலத் தேனீ பார்த்துக் கொண்டிருந்தான். தலைவன் தன் கோட்டின் உள்புறம் இருந்த பையிலிருந்து, கோகுலம் அளவுள்ள - சிவப்புஅட்டை போட்ட ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து மேஜையில் வைத்துக் கொண்டான். அதிலிருந்த பக்கங்களைப் புரட்டினான். அதிலேயே ஏதோ எழுதினான். தேனீ அதை வேதனையோடு பார்த்தான். சதியாளர் தனக்கு வெகு அருகிலேயே கூடி மிக முக்கியமான முடிவு எடுப்பதைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்கள் பேசுவதில் ஒரு சொல்லைக் கூடக்கேட்க முடியவில்லையே என்று துடித்தான். |