அவர்கள் என்ன முடிவு செய்தார்கள்? அதை மட்டும் அறிய முடிந்தால், அதற்கு விலையாகத் தன் உயிரையும் தரச் சித்தமாக இருந்தான். கண்ணாடிச் சன்னலுக்குப் பின்னே தெரிந்த அறையிலிருந்த சதியாளார்களின் தலைவனைப் போலத் தோற்றமளித்தவன் எழுந்தான். மற்றவரும் எழுந்து விட்டார்கள். சில நிமிடங்களில் அந்த அறை காலியானது. தேனீ காலியான அறையையே வெகுநேரம் பார்த்தான். வெறும் அறையைப் பார்ப்பதால் என்ன பயன்? தேனீ அப்போதும் மரத்திலிருந்து கீழே இறங்கவில்லை. பத்து நிமிடத்தில் சிலர் அந்தப் பங்களாவிலிருந்து வெளியே சென்றனர். அவர்கள் அறைக்குள் இருந்தவர்கள் தாம். அவர்களில் யாரையாவது தொடர்ந்து போனால், சதியாளரின் முடிவுகளை அறிய முடியுமா? தேனீ சிந்தித்தான். அவன் பம்பாயிலிருந்து கண்காணித்து வரும் ஆசாமி வெளியேவந்தால் அவனைப் பின்பற்றிச் செல்ல நினைத்தான். அதுவரை மரத்திலே இருப்பதற்குப் பதில் கீழே இறங்கி நிற்கலாமே ! தேனீ நினைத்துக் கொண்டிருக்கும்போதே பங்களாவிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் அறைக்குள் இருந்த தலைவன்-அதாவது, தலைவன் என்று தேனீயால் நினைக்கப்பட்டவன். அவன் பங்களாவிலிருந்து வெளியே வந்தான். சாலை வழியாகச் செல்லாமல், தேனீ ஏறியிருந்த மரம் இருந்த பகுதியில் நிதானமாக நடந்தான். அவன் எங்கே போகிறான்? |