பக்கம் எண் :

28 

தட்டுடன் பாதி தேன் கூடு வெட்டுண்டு கீழ்நோக்கிச் செல்வதற்கும், நடந்து கொண்டிருந்த தலைவன் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. பாதி தேன் கூடுஅவன் தலையில் மோதி தோளில் குதித்துக் கீழே விழுந்தது.

மறுவிநாடி !

“ஆ... ஓ... ” என்று அலறிய தலைவன் ருத்ர தாண்டவம் ஆடினான்.

தேன் கூட்டிலிருந்த தேனீக்கள் தலைவனை முற்றுகையிட்டு, முகம், கை, கால் என்று கண்ட இடங்களில் கொட்டின! அவன் வலி பொறுக்க முடியாமல், குதித்துக் கூச்சலிட்டு ஓடினான். தேனீக்களோ அவனை விரட்டிச் சென்றன. தலைவன் ஒரு வழியாக பங்களாவுக்குள் நுழைந்து விட்டான்.

தேனீக்கு-ஒற்றன் தேனீக்கு இக்காட்சி மகிழ்ச்சி அளித்தது.

“நமது தாய்நாட்டுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் ஒருவனை இப்படித்தான் கொட்டவேண்டும் ! எனக்கு, அவனை ஓட ஓட விரட்டிய தேனீ என்ற பெயர் மட்டும் இருக்கிறது. செயல் இல்லையே !”

தேனீ நினைத்தபடி தேன் கூடு விழுந்த இடத்தைப் பார்த்தான். தேன் கூட்டுப் பக்கத்தில் சிவப்புத் தட்டு! அதற்கு சிறிது தூரத்தில்... ? அது என்ன? இன்னொரு சிவப்புத் தட்டா?சிறுவன் எறிந்தது ஒரு தட்டுத்தானே?

தேனீயின் பார்வை சிறுவர்கள் விளையாடிய பங்களாவைத் துழாவியது. அங்கே சிறுவர்கள் இல்லை... அவர்கள் எறிந்த தட்டுப் பட்டுதான் ஒருவர் ஐயோ என்று கூச்சலிடுகிறார் என்று நினைத்தார்கள். அதனால் கூச்சல் கிளம்பியதும் அவர்கள் வீட்டுக்குள் ஓடிமறைந்து விட்டார்கள்.