தேனீ மீண்டும் தேன் கூடு விழுந்த இடத்தைப் பார்த்தான். வந்தது ஒரு சிவப்புத் தட்டுத்தானே? இரண்டு எங்கிருந்து வந்தது? தேனீயின் பார்வை கூர்மையானது. தேன் கூட்டுக்கு அருகே இருப்பது தான் சிவப்புத் தட்டு ; சற்று தூரத்தில் இருப்பது வட்டமான தட்டல்ல ! அது என்ன? தேனீ அவசர அவசரமாகக் கழுத்தில் தொங்கிய பைனாகுலரைக் கையில் பிடித்துக் கண்ணில்பொருத்திப் பார்த்தான். அது வட்டமானதல்ல ! நீண்ட சதுர வடிவம் பெற்றது ! இரண்டாக மடிந்த மடிப்பு சீராகாமல், ஒரு பகுதி நிமிர்ந்து நின்று காற்றில் அசைந்தது. அது சிவப்பு அட்டை போட்ட நோட்டு ! தலைவன் ரகசியக் கூட்டத்தில் பயன்படுத்திய நோட்டு ! அது எப்படி அங்கே வந்தது? தலைவனின் கோட்டுப் பைக்குள் இருந்தது. தேனீக்கள் கொட்டிய போது அவன் ஆடிய ருத்ரதாண்டவத்தில் கீழே விழுந்து விட்டது. அதைக் கவனிக்காமல் அவன் ஓடிவிட்டான். இதை உணர்ந்த தேனீயின் முகம் மலர்ந்தது. ‘கடவுளே ! உனக்கு ஆயிரம் நன்றி !” என்று கூறிக் கொண்டே மரத்திலிருந்து சரசரவென இறங்கினான் நோட்டு இருந்த இடத்தைநோக்கி ஓடினான். |