“தம்பீ, இதை நவம்பர் பதினாலாம் தேதிக்குள் சென்னையில் சேர்த்துவிட வேண்டும். சதிக் கூட்டத்தாரின் நோட்டிலிருந்த கடைசிப் பக்கத்தை நான் படம் பிடிக்கவில்லை. அதில் என்ன இருந்தது தெரியுமா? வரும் நவம்பர் பதினாலாம் தேதியில் சென்னையில் ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அது முன்னோடி. அது வெற்றி பெற்றால், டிசம்பர் முதல் தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ் வாய்ந்த, அரசியல்வாதிகளைக் கொலை செய்யப் போகிறார்கள். நவம்பர் பதினாலாம் தேதி யாரைக் கொல்லப் போகிறார்கள் என்பது அதில் இருந்தது. டிசம்பர் முதல் தேதியாரைக் கொல்லப் போகிறார்கள் என்பது அதில் இல்லை. ஆனால் அக்கொலைகளைச் செய்யப் போகும் கொலைகாரர்களின் பட்டியல் ஃபிலிமில் உள்ளது.” தேனீக்கு மூச்சு வாங்கியது ! அதே நேரத்தில் தூரத்தில் யாரோ பேசும் குரல் கேட்டது. தேனீ மிரண்டான். “தம்பீ, என்னைத் தேடுபவர்கள் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் நீ சிக்கக் கூடாது. அவர்கள் உன்னைப் பார்க்கவும் கூடாது ! ஓடு ! இந்த ஃபிலிமை நீயே கொண்டு சென்று சென்னையில் சேர்க்க வேண்டும்.” “செய்கிறேன் ஐயா ! என் உயிரே போனாலும் கவலையில்லை. கொலையாளர்களின் பட்டியலை நீங்கள் குறிப்பிட்டவரிடம் சேர்த்து விடுகிறேன். ஐயா, சென்னையில் நவம்பர் பதினாலாம் தேதி யாரைக் கொலை செய்யப் போகிறார்கள்?” சேரன் கேட்டான். |