கொண்டான். கொஞ்ச நேரத்தில் பொத்-பொத் என்று இரு சத்தங்கள் கேட்டன. ‘ரெண்டு பேர் வருகிறார்கள்’ என்று உணர்ந்து கொண்ட சேரன் இன்னும் வேகமாக ஓடினான். ஒற்றையடிப் பாதை ஒரு சாலையில் சங்கமமானது. அந்தச் சாலையில் இடப்பக்கம் திரும்பிச் சென்றால் விஜயின் பங்களா வரும். அதற்குள் ஓடி நுழைந்து கொள்ளலாம். ஆனால் பின் தொடர்ந்து வருபவர்கள் தான் தங்கியுள்ள இடத்தைத் தெரிந்து கொள்வார்கள். ‘கூடாது! அவர்கள் என் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளக் கூடாது !’ சேரன் வலப்பக்கம் திரும்பி ஓடினான். பின் தொடர்ந்து வந்த இருவரில் முன்னே வந்து கொண்டிருந்த ஒருவன், சேரன் வலப்பக்கம் திரும்புவதைப் பார்த்தான். அந்தச் சாலையில் ஏதாவது ஒரு பங்களாவுக்குள் அவன் நுழைந்து விடும்முன் பிடித்து விட வேண்டும் என்னும் ஆவேசத்துடன் கால்களை எட்டப் போட்டான். ஓர் உருண்டைக் கல்லின்மீது அவன் கால் வைக்க, கல் அவன் காலை இழுத்துக் கொண்டு பக்கவாட்டில் உருள, அவன் கீழே விழுந்தான். விழுந்தவன் எழுந்து கொள்ள முயல்வதற்கு முன், அவனுடன் வந்த மற்றொருவன் அந்த இடத்துக்கு வந்து விட்டான். அவன் நின்று, கீழே விழுந்தவனைத் தூக்கி விடக் கையை நீட்டினான். விழுந்தவன் அதைப் பற்றிக் கொள்ளவில்லை. |