சுட்டானோ? நீ அந்தப் பக்கம் பங்களாக்களைக் கவனி. நான் இந்தப் பக்கம் பார்க்கிறேன்.” பாபு சாலையின் எதிர்ப் பக்கம் நகர, ஜாக்கி, வலப்பக்கத்தைக் கவனித்தான். அரைமணி நேரம் சென்றது. இருவரும் சந்தித்தனர். அவர்கள் டார்ச் ஒளியில் பார்த்த பையன் எங்கே ஒளிந்து கொண்டான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இடப் பக்கம் திரும்பியிருக்கலாம்’ என்று பாபு சொன்னதை ஜாக்கி, சில முறை மறுத்தான். பிறகு ‘சரி, அங்கும் பார்க்கலாம்’ என்று கூறி அவனுடன் சென்று தேடினான். அவர்கள் தேடிய பையனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலையிலிருந்த பங்களாக்களுக்குள்ளே சென்று தேட அவர்களுக்குத் தைரியம் இல்லை. அதனால் வெளியிலிருந்த படியே அலசிப் பார்த்தார்கள். பையன் கிடைக்கவில்லை. அவன் நிச்சயம் சாலை சரிந்து இறங்குவதற்கு முன்னேயுள்ள ஏதோ ஒரு பங்களாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தான், ஜாக்கி. அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் ஜாக்கியும் பாபுவும் தம் மற்றக் கூட்டாளிகள் இருக்கும் இடத்துக்கு-தேனீ இறந்து கிடக்கும் இடத்துக்குப் போனார்கள். சேரன் எங்கே போனான்? வலப்பக்கம் திரும்பி ஓடிக்கொண்டிருந்தான், சேரன். அப்போதே எதிரே வந்த காரின் விளக்கு அவன்மேல் பட்டது. சேரன் காரைப் பார்த்தான். அது விஜயின் கார். உடனே குறுக்கே நின்று கையைக் காட்டினான். டிரைவருக்குச் சேரனைத் தெரியும். அதனால் வண்டியை நிறுத்தினான். சேரன் பின் சீட்டின் கதவைத் திறந்து காரில் ஏறிக்கொண்டான். |