பக்கம் எண் :

40 

“என்ன தம்பீ, இப்படி ஓடி வர்றே?”

டிரைவரின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் சேரன் இல்லை.

“அப்புறம் சொல்றேங்க.”

டிரைவர் மேலும் ஒன்றும் கேட்காமல் காரைச் செலுத்தினான். கார், ஒற்றையடிப் பாதை சேரும் இடத்தைக் கடந்த பிறகுதான் பாபு சாலைக்குள் வந்தான். அதனால் கார் அவன் பார்வைக்குத் தப்பியது.

காரிலே டிரைவரைத் தவிர யாருமில்லை. விஜயின் தந்தை, தமது ‘ஜேம்ஸ்பாண்ட் பெட்டி’யைப் பங்களாவில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதைக் கொண்டு வருவதற்காக வந்த கார் சேரனைக் காப்பாற்றியது.

சேரன் பங்களாவில் இறங்கிக் கொண்டான். சிறிது நேரத்தில் டிரைவர், பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

பங்களாவின் மாடிக்குச் சென்ற சேரன், ஒரு கண்ணாடிச் சன்னலின் பின்னே நின்று சாலையைப் பார்த்தான். வெகுநேரத்துக்குப் பிறகு இரண்டு பேர், இருபுறங்களிலும் இருந்த பங்களாக்களை நோட்டமிட்டவாறு வருவது தெரிந்தது. அவர்கள் விஜயின் பங்களாவைத் தாண்டிச் சிறிது தூரம் சென்றார்கள். பிறகு வந்த வழியே திரும்பினார்கள்.

அவர்கள் தன்னை விரட்டி வந்தவர்களே என்பதைச் சேரன் உணர்ந்தான். “அவர்கள் மீண்டும் வரலாம். ஒரு வேளை பொழுது விடிந்த பிறகு வரலாம். அவர்களிடம் சிக்கக்கூடாது. உடனே கோயமுத்தூர் போய்விட வேண்டும்” என்று நினைத்தான் சேரன்.