பக்கம் எண் :

 41

நினைத்தவுடனே அவனால் புறப்பட முடியுமா? விஜய் வரும் வரை காத்திருக்க வேண்டும் ! அதைத் தவிர வேறு வழியில்லை.

இரவு எட்டு மணிக்கு, சமையற்காரனின் வற்புறுத்தலால் சேரன் ஓரளவு சாப்பிட்டான். அதன்பின், விஜயை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

மணி ஒன்பதாயிற்று !

விஜய் வரவில்லை.

சேரன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். கம்பளியைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டான். அறைக்குள் இருந்த ஹீட்டரின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டே, அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இமைகள் மெல்லக் கீழிறங்கின !

“தூங்கக் கூடாது ! தூங்கக் கூடாது” என்று கூறிக் கொண்டே சேரன் படுக்கையிலிருந்து இறங்கினான். அறைக்குள்ளேயே நடந்தான்.

மணி ஒன்பதரை !

சேரன் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு விஜய் உள்ளே வந்தான். அறைக்குள்ளே, கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப்போல நடை போட்டுக் கொண்டிருந்த சேரனைப் பார்த்ததும் வியப்படைந்தான்.

“சேரா ! நீ இன்னும் தூங்கலையா?”

விஜய் கேட்டான். அவனைக் கண்டதும் சேரன் முகம் மலர அவனருகே வந்தான்.

“விஜய் ! நான் இப்பவே கோயமுத்தூர் போகணும். பஸ்ஸிலோ, டிரெய்னிலோ அனுப்பிவைச்சுடு, ப்ளீஸ் !”