சேரனின் வேண்டுகோள் விஜயின் வியப்பை விந்தியமாக உயர்த்தியது. அவன் சேரனை நன்றாகப் பார்த்தான். அவனிடம் ஒரு வகை பதட்டம் இருந்தது. அவன் உடையில் இன்னும் ஆங்காங்கே மண் ஒட்டிக் கொண்டிருந்தது. கண்களில் ஏதோ ஒரு கலவரம் தெரிந்தது. “சேரா ! உனக்காக நான் எதுவும் செய்வேன். ஆனால் இப்போது மணி ஒன்பதரைக்கு மேலாகி விட்டது. இதற்கு மேல் டிரெய்னும் இல்லை பஸ்ஸு ம் இல்லை. இந்த இரவில், இந்தக் குளிரில், கோயமுத்தூருக்குப் போக வேண்டிய அவசரம் என்ன? உன் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ உடம்பு சுகமில்லையா? ஏதாவது செய்தி வந்ததா?” ‘இல்லை’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான், சேரன். “பின் ஏன் இப்பவே கோயமுத்தூர் போகணும்னு சொல்றே? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்குத் திரும்புவது தானே நமது திட்டம்?” “ஆமாம் விஜய். ஆனாலும் நான் இப்போதே கோயமுத்தூர் போகணும். ஏன்-எதற்காக என்று கேட்பதற்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனால் இப்போ அதை நான் சொல்லக் கூடாது. திரும்பவும் உன்னைக் கோவையில் சந்திக்கும்போது நிச்சயம் சொல்றேன். என்னை எப்படியாவது கோவைக்கு அனுப்பு.” சேரனின் குரலிலும் பதட்டம். அவன் திடீரென்று மாறியிருப்பது தெரிந்தது. சேரன் ஏன் இப்படியிருக்கிறான்? எதற்காகக் கோவைக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறான்? விஜய் இதை மேலும் கேட்க விரும்பவில்லை. “சரி, சேரா ! நீ இப்போது சொல்ல வேண்டாம். உன் ரகசியத்தை நீ விரும்பும்போது சொல். ஆனால் இந்த |