இரவில் உன்னை அனுப்ப முடியாது. வெளியே பனி மூட்டம் அதிகம். குளிரும் அதிகம். அதனால் மலைவழியில், கொண்டை ஊசி வளைவுகளில் இந்தச் சூழலில் செல்வது நல்லதில்லை. அதற்கும் மேலே ஒன்று ! டிரைவர் காலையிலிருந்து ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டேயிருந்தான். அப்பா, அவனிடம் நல்லாத் தூங்கு ! காலையிலே பத்து மணிக்கு எழுந்தாலும் போதும்னு சொன்னார். இந்நேரம் அவன் அசந்து தூங்கியிருப்பான். அவனை எழுப்பி வண்டி எடுக்கச் சொல்றதும் சரியில்லே. சேரா ! பொழுது விடிந்ததும் உன்னை முதல் பஸ்ஸிலே கோவைக்கு அனுப்பறேன். சரிதானே !” சேரனால் ‘சரி’ என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை. விஜய் படுத்து விட்டான். சேரனும் படுத்தான். அவனால் தூங்க முடியவில்லை. படுக்கையில் நெளிந்து கொண்டேயிருந்தான். “சேரா ! காலையிலே எழுந்திருக்கணும்னா இப்போ நல்லாத் தூங்கணும். மத்த நினைவுகளை ஒதுக்கிவிட்டுத் தூங்கறதிலே கவனம் செலுத்து.” விஜய் குரல் ஒலித்தது. “நீ சொல்வது உண்மை ! சீக்கிரம் தூங்கினால்தான், சீக்கிரமாக எழுந்து கொள்ளமுடியும். குட் நைட் விஜய்.” “குட் நைட்.” சேரன் சீக்கிரமாகத் தூங்கிவிட்டான். மறுநாள் காலை ‘சேரா ! என்ற விஜய் அழைத்தபடி அவன் உடம்பையும் அசைத்தபோதுதான் எழுந்தான். ’ எழுந்தபோதே, “மணி என்ன விஜய் ! பொழுது விடிஞ்சுட்டுதா?” என்று கேட்டான், சேரன். |