பக்கம் எண் :

 45

கார் பங்களாவை விட்டு வெளியே வந்தது. பனி மூட்டம் முற்றிலும் விலகாத சாலையில் சென்றது.

சிறிது நேரம் பொறுத்து சேரன் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் கார் வருவது தெரிந்தது.

சில நிமிடம் பொறுத்து மீண்டும் திரும்பிப் பார்த்தான் சேரன். அதே அம்பாசிடர்கார், அதே இடைவெளியில் வந்தது. காரையே உற்றுப் பார்த்தான். காரின் முன் சீட்டில் டிரைவரும், டிரைவருக்குப் பக்கத்தில் ஒருவனும் இருப்பதைப் பார்த்தான்.

டிரைவர் குறுந்தாடி வைத்திருந்தான். தலையில் ஒரு சென்டி மீட்டர் உயரமுள்ள முடி! அண்மையில் மொட்டையடித்துக் கொண்டான் போலும். அருகே இருந்தவன் தலையில் அடர்த்தியான முடி ! சுருள் சுருளான முடி !

“யார் இவர்கள்?”

“ஒருவேளை நேற்று என்னை விரட்டிய ஆசாமிகளோ?”

“டிரைவர் மெதுவாகப் போங்க” என்றான் சேரன்.

டிரைவர் கிளட்சை மாற்றி, ஆக்சிலேட்டரை மிதித்த காலின் அழுத்தத்தைக் குறைத்து, காரின் வேகத்தைக் குறைத்தான்.

சேரன் திரும்பிப்பார்த்தான். வெள்ளை அம்பாசிடரும் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டதே தவிர, சேரனின் காரைத் தாண்டிப் போகவில்லை.

“டிரைவர், கொஞ்சம் வேகமாகப் போங்க.”