பின்னே திரும்பிப் பார்த்த சேரன் இதைக் கவனித்தான். உடனே, “டிரைவர், காரை நிறுத்துங்க. சீக்கிரம்” என்றான். கார் நின்றது. சேரன் அவசர அவசரமாகக் காரிலிருந்து இறங்கினான். “டிரைவர் ! நானே பஸ் ஸ்டாண்டுக்குப் போய் விடறேன். நீங்க இப்படியே எங்காவது கொஞ்சம் சுற்றிவிட்டுத் திரும்பிப் போங்க. பிளீஸ் ! காரணம் கேட்காதீங்க! கிளம்புங்க !” நேற்றிரவே சேரனின் கலவரத்தைப் பார்த்த டிரைவர் இன்று ‘மெதுவாப் போங்க-வேகமாப் போங்க’ என்று சேரன் கூறியதையும் பின்னே அம்பாசிடர் தொடர்ந்து வருவதையும் கவனித்திருந்தான். ‘சேரனை யாரோ பின் தொடர்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பத் துடிக்கிறான்’ என்பதைப் புரிந்துகொண்டான். அதனால் காரை உடனே கிளப்பினான். சேரன் சாலையின் ஓரம் இருந்த ஒரு கடை மறைவில் நின்று கவனித்தான். இரண்டு நிமிடத்தில் சாலையின் குறுக்கே நின்ற லாரி, திரும்ப முடியாமல், பின்னே சென்றது. அது கொஞ்சம் நகர்ந்ததும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் சாமர்த்தியத்தோடு அம்பாசிடர் அந்த வழியில் நுழைந்தது. நுழையும் போதே டிரைவர் எதிரே பார்த்தான். தூரத்தில் நீலநிற பியட் போவது தெரிந்தது. உடனே ஆக்சிலேட்டரை அழுத்தினான். அம்பாசிடர் காற்று வேகத்தில் பறந்தது. கடையின் மறைவில் நின்ற சேரன் அம்பாசிடரை நன்றாகப் பார்த்தான். உள்ளே இருந்த இரண்டு பேரை |